உயிர்ப்புக்கள்


திரு.எம்.எஸ்.கமலநாதனின்
 மன உயிர்ப்புக்கள்

       வதிரியூரில் பல்வேறு குடும்பக் குழுமங்கள் மத்தியில் யாவத்தை என்ற நீண்டகால வர்த்தகம்,கல்விப் பாரம்பத்திற்குரிய குடும்பங்களில் சீனித்தம்பி தங்கரத்தினம் தம்பதியினருக்கு மூத்த மகனாக 1939 ம் ஆண்டு மாசி 26ம் திகதி பிறந்தேன். யாவத்தையில் வசித்த கூட்டுக்குடும்பங்களின் மத்தியில் நான் மூத்தவன். ஆண் பிள்ளை என்பதனாலும் என்னிடம் பற்றுப் பாசம் என அபிரிமித்மாகக் கிடைக்கப் பெற்ற எனக்கு தேவையான சகல வசதிவாய்ப்புக்களும் ஏற்படுத்தப் பட்டிருந்தன.
     கல்விப் பருவத்தையடைந்த நான் யா/தேவரையாளி இந்துவில் (அப்போதைய தேவரையாளிச் சைவ கலைஞானசபைப் பாடசாலை) ஆரம்பக்கல்வியினைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் கற்றுப் பின் எனது தகப்பனார் தென்னிலங்கை மாத்தறையில் தொழில் நிமிர்த்தம் இருந்தமையால் தென்மாகாணம் மாத்தறை சென்தோமஸ் கல்லூரியில் (1946-1948) கல்விதனைத் தொடர்ந்தேன்.அதனையடுத்து யா/சென்யோன்ஸ் கல்லூரியில் 1949-1952 வரை கல்லூரி விடுதி (BOARDING) யில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்தேன். இக்காலப்பகுதியில்தான் அங்கு பதினொரு வயதுப் பிரிவு உதைபந்தாட்ட அணியில் ஒருவராக இணைந்து விளையாடினேன். இதுதான் எனது உதைபந்தாட்ட முதல் பிரவேசமுமாகும்.
   எனது தந்தையார் எமது குடும்ப வர்த்தக நிலையங்களில் காலத்துக்கு காலம் தொழில் செய்யவேண்டி ஏற்பட்டதால் சென்யோன்ஸ் கல்லூரியிலிருந்து மீண்டும் தென் இலங்கைக்குச் செல்ல நேரிட்டது. இதனால் 1953-1957ம் ஆண்டுக்காலம் வரையில் கேகாலையில் சென்மேரிஸ் கல்லூரியில் கல்வியினைத்தொடர்ந்தேன். இக்காலத்தில் எனது தாயாரின் தகப்பனார் “சரவணாஸ்” என்ற வர்த்தக நிறுவனத்தை அங்கு நடாத்திக் கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 
     எனது விளையாட்டுதுறை ஆர்வம், எனக்கிருந்த வசதிவாய்ப்புக்கள் அக்கல்லூரியின் முதலாம் தர அணிகளான உதைபந்தாட்டம், துடுப்பாட்டம் (CRICKET) என்பவற்றில் இணைந்து விளையாடி வந்தேன். இந்தப் பிராந்தியத்தில் அப்போது விளையாட்டுக்களுக்கு மஸ்தியர்களாக கடமையாற்றிய மந்தரா, அபயசிங்க ,யோன்புள்ளே ஆகியோரின் மத்தியஸ்த முறைகளை நன்கு ரசித்துக்கொண்டதுடன் அவர்களுடைய சைகைகளிலும் (ACTION) மிகவும் ஈர்க்கப்பட்டேன். இவர்கள் மூவரும் அன்றைய அகில இலங்கை முதல்தர உதைபந்தாட்ட மத்தியஸ்தர்களாக நிர்மாணிக்கப்பட்ட தகமையினை யுடையவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அப்போதே எனது மனத்திலும் இவர்களைப்போன்ற ஒரு தலைசிறந்த மத்தியஸ்தராக எதிர்காலத்தில் வரவேண்டும் என்ற ஆதங்கம் என்னிடம்  உற்பவித்தது.
     இந்த நிலையில் 1954ம் ஆண்டு எமது நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரம் என்னை மீண்டும் யாழ்ப்பாணம் வருவதற்கு வழிவகுத்தது. எனவே எனது கல்வியினை யா/தேவரையாளி இந்துக் கல்லூரியில் தொடர வாய்ப்பளித்தது. இக்கால கட்டத்தில் இக்கல்லூரியின் அதிபர் திரு.மூ.சி.சீனித்தம்பி அவர்களின் ஞானோதயத்தில் கல்வித்துறையும் விளையாட்டுத்துறையும் புகையிரதப்பாதையின் இரு தண்டவாளங்கள் போன்று சமாந்தரமாகச் சென்று கொண்டிருந்த நிலியில் இக்கல்லூரியின் விளையாட்டுத்துறைக்குப் பொறுப்பாக இருந்த திரு.பெ.அண்ணாசாமி  ஆசிரியர்கள் அவர்கள் என்னை இனங்கண்டு முன்னிலைப்படுத்தி அணித்தலைமை உட்பட்ட அனைத்து நிலைகளிலும் எனக்குச் சந்தர்ப்பமளித்தார். இதற்குரிய இன்னொரு நிலைப்பாடு அப்போது நான் தென்னிலங்கையிலிருந்து மாணவனாக இங்கு வந்தமையால் என்னிடம் அமைந்துகாணப்பட்ட தென்னிலங்கை நடை,உடை, பாவனைகள் இங்குள்ள மாணவர்களினதும் நடை,உடை,பாவனையிலிருந்தும் வேறு படுத்தி வித்தியாசமான ஒரு வீச்சான சாயலும் காரணமாக இருக்கலாம் என உணர்ந்துகொண்டேன். இந்த உடைசார் எனது இயல்பான வீச்சுக்குரிய அமைப்பு இன்றும் என்னிடம் அமைந்துள்ளமை குறிப்பிடக்கூடியதாகும். விளையாட்டுக்களிலும் சரி, வாழ்க்கையிலும் சரி எனக்கென ஒரு தனித்துவம் என்னிடம் குடிகொண்டுள்ளமையினை மற்றவர்கள் சுட்டிக்காட்டும் பொழுது மீண்டும் எனது தென்னிலங்கை வாழ்க்கை என்னைத் தட்டிக் கொடுக்கும்.
      
 எனது விளையாட்டு அனுபவதில் இன்னொருவகையில் எமது கிராமம் அதற்கு அணி சேர்த்தமைக்கு வதிரி டயமன்ட்ஸ் விளையாட்டுகழகம் என்றால் அது மிகையாகாது. ஐம்பதேழுகளில் டயமன்ட்ஸ் விழையாட்டுக்கழகத்தின
செயற்பாடுகளில் திரு.பெ.அண்ணாசாமி ஆசிரியர் அவர்களுக்கிருந்த முக்கியத்துவம் எனக்கு எனக்கு மேலும் வலுவூட்டற்குரிய சந்தர்ப்பத்தை அளித்தது. டயமன்ட்ஸ் கழக உதைபந்தாட்டம்,கரப்பந்தாட்டம்,துடுப்பாட்டம் என்பவற்றில் விளையாட்டௌ வீரனாக விளங்கிய எனக்கு 1957ல் காங்கேசன்துறை றோயல் விளையாட்டுக் கழகத்தினரால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் நாம் எட்டிய சம்பியன் போட்டியின் வெற்றியின் பின் எனது நாட்டம் உதைபந்தாட்ட மத்தியஸ்தத்தினை நோக்கித்திரும்பியது. இதனால் எனது விருப்பம் காரணமாக உள்ளூர் போட்டிகளுக்கு மத்தியஸ்தம் வகித்துப் போதிய பயிற்சினையும் பெற்றுக் கொண்டேன். அக்காலகட்டத்தில் வடமராட்சிப்பிரதேசத்தில் தகுதி பெற்ற உதைபந்தாட்ட மத்தியஸ்தர்கள் எவரும் இருக்கவில்லை. பாடசாலைகளில் உதைபந்தாட்டம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் சிலரே போட்டிகளுக்கு மத்தியஸ்தம் வகிக்க முன்வந்தார்கள். மேலும் வடமராட்சியில் முதல்தரமான போட்டிகள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்துதான் மத்தியஸ்தர்கள் அழைத்துவரப்படுவர். இதில் முதல்தர மத்தியஸ்தர்களாக விளங்கிய மாட்டின் மாஸ்ரர், சிங்கராயர் போன்றவர்கள் குறிப்பிடக்கூடியவர்களாவர். ஒருமுறை நீர்கொழும்பிலிருந்தும் மத்தியஸ்தர்கள் பலர் அழைக்கப்பட்டமை எனக்கு ஞபகத்தில் உண்டு.
        இப்படியான ஒரு நிலையில் நான் அப்பொழுது G.C.E (O/L) படித்துக் கொண்டிருக்கும் போது 1958 ல் யாழ் மத்திய கல்லூரி அதிபர்கள் சபாலிங்கம்,கனகலிங்கம் ஆகியோரின் வழிகாட்டலில் உதைபந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான பயிற்சி வகுப்புக்களில் பங்கு கொண்டு அப்பரீட்சைகளில் சித்தியடைந்து முதல்தர மஸ்த்தியஸ்தருக்கான தகுதி பெற்றேன். இந்த தராதரத்தகுதியுடன் வடமராட்சியில் பல்வேறு முதல் நிலை உதைபந்தாட்டப் போட்டிகளுக்கு மத்தியஸ்தம் வகித்து சிறப்பாக போட்டிகளை முடித்துக் கொடுத்தேன். எனது தகமையும் திறமையும் பலராலும் பாராட்டப்பட்டது. அந்தக்காலத்தில் உதைபந்தாட்டப் போட்டிகளுக்கு மத்தியஸ்தம் வகிப்பது பல்வேறு சிரமங்களுக் குரியதாகும். விளையாட்டு வீரர்களிலிருந்து வெளியில் இருக்கும் இரசிகர்கள், ஆதரவாளர்கள் எனப்பலதரப்பட்டவர்களின் முரண்பாடுகளுக்கு முகம் கொடுத்தும்,சிலசந்தர்ப்பங்களில் அவர்களது தாக்குதல்களுக்கும் ஆளாகவும் நேரிடும். எனது அனுபவத்தில் அப்படியான அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமை எனது தெளிவான, நடுநிலமையான,கண்டிப்பான நிலையே காரணமாகும் என்பதில் பெருமைப் படுகின்றேன்.
     1960ம் ஆண்டு தொழில்வாய்ப்புக் கருதி தென்னிலங்கை காலி நகருக்கு செல்லவேண்டியிருந்தது. இலங்கையில் உதைபந்தாட்டத்திற்கு முக்கியத்துவம் கொண்ட பிரதேசங்களில் காலி மாநகரும் ஒன்றாகும். 1917ல் அப்போது யப்பான் நாட்டுக் கெதிராக பிரித்தானிய விமானப் படையினர் ஹொக்கலவில் (P.A.F) அங்கு பெரிய முகாம் (CAMP) போட்டிருந்தார்கள். அங்கு மக்கள் நடமாட்டமின்மையால் படையினர் தங்கள் பொழுது போக்குக்கு விளையாட காலி நகரில் அமைந்துள்ள கோட்டை மைதானத்திற்குத்தான் வருவார்கள். இந்த நிலயில் அங்கு பல விளையாட்டு கழகங்கள் தோன்றின. அவற்றில் பிரபல்யமான கழகமாக விளங்கிய “சதேன்ஸ்” (SOUTHERNS S.C) விளையாட்டுக் கழகத்தில் அங்கத்தவராக இருந்ததுடன்,அவர்களுடன் சேர்ந்து மிகக் கடினமான பயிற்சியும் பெற்றேன். 1961ல் அங்கு பிரேசிலில் பயிற்சியளிக்கப் பட்டுவந்த அல்பிரட் பெர்னாண்டோ என்ற உதைபந்தாட்ட வீரரால் வழங்கப்பட்ட உதைபந்தாட்டம்,மத்தியஸ்தம் வகித்தல் போன்றவற்றில் சகல பயிற்சிகளையும் பெற்றபின்னர்தான் அவை பற்றிய நுணுக்கமான செயல்பாடுகளையும் அறிந்து கொண்டதுடன் மத்தியஸ்தம் பற்றிய தேர்விலும், செய்முறையிலும் சித்தியடைந்து என்னை நிலைப் படுத்திக்கொண்டேன்.
       1962ம் ஆண்டு மீண்டும் நான் யாழ்ப்பாணம் வடமராட்சிக்கு வந்த பொழுது அல்வாய் மனோகரா சனசமூகம் சார்ந்த “சித்திரா பூரணைஎன்ற அமைப்பு பெரியளவில் மனோகரா விளையாட்டுக்கழக மைதானத்தில் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியினை அழைக்கப்பட்ட வடமராட்சியைச் சேர்ந்த கழகங்களுக்கிடையே நடாத்திக் கொண்டிருந்தனர். எனது வருகையுடனான முதல் மத்தியஸ்தம் இங்குதான் ஆரம்பமாகியது. இந்நிலையில் எனது மத்தியஸ்தருக்கான சீருடை (REFEREES KITS)எனது விசிலில் இருந்து வரும் ஆணை (COMMANDING ORDERS) இவை எல்லாம் பார்வையாளருக்கும், விளையாட்டு வீரர்களுக்கும், எனது சைகைகள் உட்பட அனைத்தும் கச்சிதமாகவும்,அதே நேரத்தில் புதுமையாகவும் அமைந்தமையால் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் எனக்கென ஒரு ஒரு இரசிகர் கூட்டத்தினையே தோற்றுவித்தது என்றால் அது மிகையாகாது. இத்துறை சார்ந்த நிலையில் வடமராட்சியுடன் மட்டும் நில்லாது யாழ்ப்பாணப் பட்டினம், வசாவிளான். வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, முதல் மூதூர் வரைக்கும் மத்தியஸ்தம் வகிக்க அழைக்கப்பட்டேன்.
      அப்போதைய கிழக்கு மாகாணத்தில் திருமலை மாவட்டத்தைச் சார்ந்த மூதூர் நகரம் ஒரு பிந்தங்கிய ஆற்றுப்படுக்கைகளால் வேறு படுத்தப்பட்டதும் கடற்கரையை அண்டிய பகுதியாகவும் அமைந்தது. அக்காலத்திக் அங்கு திரு.க.பரமானந்தன் அவர்கள் முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் ஓர் ஆசிரியராகவும், முஸ்லீம் மக்களிடையே மிகுந்த மதிப்பும் செல்வாக்கும் உள்ளவராக விளங்கியமையால் அவருடைய அனுசரணையுடன் நான் அங்கு வரவழைக்கப்பட்டு, என் மத்தியஸ்தக் கடமைகளை செவ்வனே செய்யக்கூடியதாக இருந்தது என்பது பதிவுக்குரியதாகும்.
     பின்பு மூதுரில் அப்பிரதேசத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்ட பின் அமைச்சர் மவுறுக் தலைமையில் பகலிரவுப் போட்டியாக அறுபத்தைந்து ஓவர் கேம் கரப்பந்தாட்டப் போட்டிகளும், இரண்டு உதைபந்தாட்டப் போட்டிகளும் இடம் பெற்று நடாத்தி முடிக்கப்பட்டன. இப்போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மத்தியஸ்தர்களுள் நான் மட்டுமே யாழ்ப்பாணத்திலிருந்து சென்று கடைமையாற்றினேன். இவற்றை இரவு பகலாக கழகங்களினதும், விளையாட்டு வீரர்களினதும் வேண்டுகோளுக் கிணங்க சிறந்தமுறையில் மத்தியஸ்தம் செய்து நடாத்தி முடித்தேன். இதனால் அங்கு எனக்குக் கிடைத்த முக்கியத்துவம், மதிப்பு என்பவற்றுடன், அமைச்சர் ஒருவருக்கு ஏற்படுத்தப்பட்ட வரவேற்பு, கெளரவிப்பு என்பவற்றிற்கான விழா என்றவகையில் நான் மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டேன். என்னைப் பொறுத்தவரையில் இது எனது வாழ்க்கையில் ஒரு சாதனையாகவும் கருதுகின்றேன். இதனைத் தொடர்ந்து 1962.12.27 ல் இடம் பெற்ற அல்வாய் சித்திரா பூரணை விளையாட்டுக் குழுவினரால் எடுக்கப்பட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியினையும் நான் மத்தியஸ்தம் வகித்து சிறப்பாக நிறைவேற்றி வைத்தமையினையும், அந்த சுற்றுப்போட்டிப் பருவத்துக்குரிய போட்டிகளுக்கு சிறந்தமுறையில் மத்தியஸ்தம் வகித்தவனென்ற ரீதியிலும் அக்குழுவினர் எனக்கு தங்கப்பத்தக்கப் ஒன்றினை அன்றைய பிரதம விருந்தினரால் அணிவித்து எனக்கு பெருமை சேர்த்தனர்.இந்த நிகழ்வனது எனக்கு மேலும் இதுறைசார்ந்த  பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்தது என்பதனை நன்றியுடன் ஏற்றுக் கொண்டேன்.
     இப்படியான விளையாட்டுப் போட்டிகள், மக்களிடையே ஏற்படுத்திய இரசனைஞானத்தினை மேலும் வளர்த்தெடுப்பதனை முக்கியமாகக் கொண்டு வடமராட்சியில் ஓர் அமைப்பினைத் தோற்றுவித்து அதற்கூடாக உதைபந்தாட்டத் துறையினை ஊக்குவித்து வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் வடமராட்சிப் பிரதேசத்தின் முக்கியஸ்தர்களாக விளங்கிய ஓய்வு பெற்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (A.S.P) திரு.V.K.ஆறுமுகம், கல்விப் பணிப்பளரும் சிறந்த உதைபந்தாட்ட வீரருமாகிய திரு.V.தங்கராசா, ஓய்வு பெற்ற பொலிஸ் இன்ஸ்பெக்டர் திரு,ந.பாஸ்கரன் ஆகியோரின் முயற்சியால் பருத்தித்துறை உதை பந்தாட்டச்சங்கம் (P.D.F.A),பருத்தித்துறை உதைபந்தாட்ட மத்தியஸ்தர் சங்கம் (P.D.R.F.A) என்ற சங்கங்களைத் தோற்றுவித்து இத்திறை சார்ந்த ஆர்வலர்கள் பலரையும் ஒன்றிணைத்து ஒரு கட்டமைப்புக்கு கீழ் கொண்டுவந்தனர். இதனால் ஆங்காங்கே உதிரிகளாகச் செயற்பட்ட மத்தியஸ்தர்கள், விளையாட்டுக் கழகங்கள் எல்லாம் ஒன்றிணைக்கப்பட்டனர்.மேலும் வெளி மாவட்டங்களிலிருந்து தரமான பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சிகள் உரிய முறையில் வழங்கப்பட்டதுடன் தரமான விளையாட்டு வீரர்கள் வெளிக் கொணரப்பட்டனர்.
     1972ல் கொழும்பில் விளையாட்டுத்துறை அமைச்சினால் அமைச்சு மைதானத்தில் சர்வதேச ரீதியிலான உதைபந்தாட்ட மத்தியஸ்தர்களான ஜேர்மன் நாட்டு உதைபந்தாட்ட மத்தியஸ்தர்ரான “ பாப்பே “ அவர்களும் FIFA உலக மத்தியஸ்தர் “ கேட் “ என்பவர்களால் எனக்கு ஒருவாரப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் பங்கு கொண்டவன் என்றவகையில் பல்வேறு அனுபவங்களையும் மதி நுட்பங்களையும் பெற்றுக்கொண்டவன் என்றவகையில் மேலும் எனக்கு சிறப்பை தந்தது எனலாம்.
       எனது உதைபந்தாட்டம்,கரப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுத் துறைகள்  சார்ந்த அனுபவ நிலையில் இந்த இரண்டு விளையாட்டுக்களினதும் நுட்பங்களை இணைத்து ஒரு புதிய விளையாட்டு முறையினை ஏற்படுத்துவது பற்றிய எனது தீவிர சிந்தனையோட்டம் என்னிடம் குடிகொண்டிருந்தது. இதன் பேறாகவே “வொலிசொக்கர்எனற எனது எண்ணத்தில் கருக்கொண்ட புதிய விளையாட்டு உருவாகியது. இதற்கு உரிய நடைமுறை விதிகள்,மைதான அமைப்பு,விளையாட்டு வீரர்கள் பற்றிய அமைப்புக்கள் என உருவகித்த நிலையில் அதனை ஒழுங்குபடுத்தி எழுத்திலும் பதித்துக்கொண்டேன். இதனை நடைமுறைச் சாத்தியமாக்கும் பொருட்டு 1986.07.06 ல் வதிரி டயமன்ட்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் எமது பகுதி விளையாட்டுத் துறையைச் சார்ந்த பெரியார்களான ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகர் திரு.V.K.ஆறுமுகம்,கல்வி அதிகாரி திரு.V.தங்கராசா ஆகியோர் முன்னிலையில் ஒழுங்கு படுத்தப்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்குபற்றிய நிலையில் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.
       இதன் ஒழுங்கு விதிகள், வீரர்களின் சமநிலை என்பன இரகசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இது ஒரு புதிய விளையாட்டு என்ற வகையிலும் அன்றிருந்த எமது நாட்டுச் சூழ்நிலைகள் பாரப்பரிய கரப்பந்தாட்டம்,உதைபந்தாட்டம் என்பவற்றிற்கு உசிதமாக இல்லாத நிலையில் பல்வேறு இடங்களில் ஏறக்குறைய இருபத்தேழு போட்டிகள் சினேகபூர்வ ஆட்டமாக வடமராட்சியில் மட்டும் இடம்பெற்றன என்பது பதிவிற்குரியதாகும். அன்று கலந்து கொண்ட விருந்தினர்கள்து மதிப்பீட்டுரையுடனும்,விளையாட்டு இரசிகர்களது ஆர்வத்துடனும் இந்த நிகழ்வு அரங்கேறியது எனலாம்.
       1986ன்பின்னர் ஏற்பட்ட எமது நாட்டின் அசாதாரண நிலை காரணமாக ஏற்பட்ட இடம்பெயர்வுகள் இதனக் கிடப்பில் போட்டுவிட்டதென்று கூறலாம். இக்கால கட்டத்தில் எனது இடம்பெயர்வு கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த நீர்கொழும்பில் எனது இருக்கையினை அமைத்துக் கொண்ட நிலையில் “வொலிசொக்கர்என்ற இந்த புதிய விளையாட்டு எனது மனதில் சிறகை விரித்து உத்வேகத்தை ஏற்படுத்தவே அகில இலங்கைக்கும் இந்த விளையாட்டு பரவவேண்டும் என்பதால் இலவசமாக நூல்வடிவில் தயாரித்து கிராம,நகர விளையாட்டுக் கழகங்களுக்கும், பாடசாலைகளுக்கும் இந்த விளையாட்டினை விஸ்தரிக்க வேண்டும் என்ற அவாவினால்வொலிசொக்கருக்கான சட்டதிட்டங்கள்,விளையாட்டாளர்கள், மைதான அமைப்புக்கள் என்பன வரை கோடுகளுடன் கூடிய ஒரு நூலினை அச்சுப்பிரதியில் அமைத்து விநியோகித்துக் கொண்டேன். இந்நூல் கூடியளவு பல இனத்தவரும் விளங்கக் கூடிய வகையில் தமிழ் மொழிப்பிரவாகத்தில் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடக்கூடியதாகும். மேலும் “ வொலிசொக்கர் “ பற்றிய விளையாட்டுக்கான பிரசாரங்களை கொழும்பு பத்திரிகைகள் குறிப்பாக வீரகேசரி,தினக்குரல்,தினகரன் (வரமஞ்சரியில் விபரமாக) போன்ற தேசியப் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்தன என்பதில் மனநிறைவுடையவனாக விளங்கினேன்.
      
      
    நான் ஒரு சராசரி மனிதனாகவே இன்றும் உள்ளேன்.என்னிடம் மனக்கிடக்கையில் நீண்டகாலமாக கனன்று கொண்டிருந்த ஒரு இலட்சிய வேட்கை இதில் குறிப்பிட்ட வகையில் காலத்துக்கு காலம் வளர்ந்து தோற்றம் பெற்றுள்ளது என்பதை மீளாய்வி செய்கின்ற பொழுது, ஒவ்வொரு மனிதனிடமும் இயல்பாகவே அமுங்கிப்போய் இருக்கின்ற எத்தனையோ காரியங்கள் செயலுருப் பெறுவதற்கு அவனுக்குரிய சந்தர்ப்பங்களும், பின்னணியும்தான் அமைத்துக் கொடுக்கின்றன என்பதற்கு எனது வாழ்க்கை பற்றிய இச்சிறிய எனது டயறி சான்று பகருகின்றது உலகவரலாற்றில் எதுவுமே அப்படியே தோன்றியவையல்ல. காலத்துக்குக் காலம் யாரோ ஒருவராலோ அல்லது சிலராலோ தனித்தும், கூட்டாகவும் ஆக்கப்பட்டவையே ஆகும். இன்று நன்கு வளர்ச்சி பெற்ற விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்கள் கூட காலத்துக்கு காலம் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையானதே என்பது எனது கருத்தாகும். இந்த வகையில் எனது மனதில் உருவான “வொலிசொக்கர்விளையாட்டும் ஒரு புதிய பார்வைக்குரியதாகும்.
      இன்று எத்தனையோ சங்கதிகள்,விடயங்கள் பலராலும் உருவாக்கப் படுகின்றன அவை சரியான முறையில் பதியப்படாமலும், ஆவணப்படுத்தப் படாமலும் விட்டுவிடப்பட்டுள்ளன. இன்னொருத்தன் அதனைத்திருடி தனதாக்கிக்கொண்டும் விடுகிறான் அல்லது தன்னிச்சையாக அதனைக் கையாளத் தொடங்கிவிடுகிறான். இதற்கு எனக்கேற்பட்ட ஒரு அனுபவத்தை இங்கு பதிவு செய்து இதனை நிறைவேற்றுகின்றேன்.
       1962ல் என்னால் இயற்றி மெட்டமைத்துப் பாடப்பட்ட  சின்னமாமியே உன் சின்னமகளெங்கே………எனப் பாடப்பட்ட பாடல் இலங்கையின் முதல் பொப் இசைப் பாடலாகும். இப்பாடல் செவி வழியாகப் பல மேடைகளிலும் குறிப்பாக இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பபட்டு கேட்ட பாடலாகும். இதனை இன்னுனொருவர் காவிக்கொண்டு தனது தயாரிப்பென விளம்பரப்படுத்தி வந்த நிலையில்  இப்பாடல் திரு M.S.கமலநாதன் அவர்களால் எழுதி மெட்டமைத்து பாடப்பட்டது என்ற உண்மையினை அறிந்த பலர் மூலம் நிரூபிக்கப்பட்ட பின்னர் அதனை இரவல் வாங்கியவரே ஒத்துக்கொண்ட நிலையில் தீர்த்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இன்றும் திரு M.S.கமலநாதனின் பாடல் என்ற முகவரியோடு அறுபத்தேழு நாடுகளில் பவனிவருகிறதென்பது சாதாரண விடயமல்ல.இவை எனது முயற்சியின் வெற்றி அனுபவமாகும் என்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
              

                  மன்றம் இணையதளப் பிரதிக்காக
                                 எம்.எஸ்.கமலநாதன்
                                                  வதிரி
                                             இலங்கை
                                               2012.07.10